தமிழக பட்ஜெட் 2025

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்

வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்
அண்ணாமலை விமர்சனம்

TN Budget 2025: தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை  நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் பெண்கள், மகளிர், மூன்றாம் பாலித்தனவருக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. மேலும், மக்கள் பயன்பெரும் வகையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களில் என மொத்தம் 936 இடங்களில்  எல்.இ.டி திரைகள் வாயிலாக நேரடியாக ஒளிப்பரப்பட்டது. 

மேலும், நாளை (மார்ச் 15) நடைபெறும் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பார்க், கோயம்பேடு பேருந்து நிலையம்,  வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா பார்க், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட 100 இடங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் நேரடி ஒளிப்பரப்பு செய்யும் பல இடங்களில் மக்கள் யாரும் வராததால் நாற்காலிகள் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.