தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம் -முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்

 அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம் -முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என கேசிவீரமணி, | KC Veeramani says no one can stop AIADMK's victory
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாகச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

இந்த நிலையில் வருகின்ற 14ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காகக் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே பந்தல் அமைக்கப் பந்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடத்தை ஆய்வு செய்தபின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஆளுகின்ற மு.க.ஸ்டாலின் அரசின் ஆவலநிலையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாகப் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

2026 சட்டமன்றத்தேர்தலில் குடியாத்தத்தில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எழுச்சியாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும், மீண்டும் திமுகவை நம்பி ஏமாற மாட்டோம். மு.க.ஸ்டான்லின் அரசுமீது பகிரங்கமாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வருகின்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

நேற்று திருப்பத்தூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும், எதிர்காலத்தில் கட்சியின் நன்மைக்காகத் தான் சந்தித்ததாகவும், எங்களைப் பொறுத்தவரை அவர்கள் எங்கள் கூட்டணியில் தொடர்வதற்கு நாங்கள் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்