தமிழ்நாடு

விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார்.. எஃப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்!

மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே தாமதமாக்கப்பட்டது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார்.. எஃப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்!
Shocking information in the FIR
நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட தாமதம் மற்றும் விதிமீறல்கள் குறித்துத் தற்போது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் உயிர்சேதம் ஏற்படக்கூடும் எனத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட நிர்வாகிகளுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்ததாக இந்த எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நாமக்கல்லில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்-ல் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்ட வருகை

நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, நாமக்கல் பிரசாரத்துக்குச் சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்தே காலை 8.45 மணிக்குத்தான் விஜய் புறப்பட்டார். மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே 4 மணிநேரம் தாமதமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலை வழியாகத் தாமதமாக வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நிபந்தனைகளை மீறினர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.

காவல்துறையின் எச்சரிக்கையும் மக்களின் துயரமும்

"பலமுறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் காவல்துறை சொன்னதை தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை. அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் உயிர்சேதம், கொடுங்காயம், மூச்சுத்திணறல் ஏற்படும் எனத் தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் சதீஷ் ஆகியோரை எச்சரித்தோம்," என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, "பல மணிநேரம் காத்திருந்த மக்கள், போதிய தண்ணீர், உணவு, மருத்துவ வசதி செய்யப்படாததால், அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தாலும் வெய்யிலின் தாக்கம் காரணமாகவும் சோர்வடைந்தனர். நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" எனவும் அந்த எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.