தமிழ்நாடு

விஜய் இன்னும் அரசியல் பாடம் படிக்க வேண்டும் - எச். ராஜா கருத்து

தவெக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

விஜய் இன்னும் அரசியல் பாடம் படிக்க வேண்டும் - எச். ராஜா கருத்து
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
நடிகர் விஜய் அரசியல் குறித்து இன்னும் நிறைய பாடம் படிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பங்கேற்ற மாநாடு

பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலிக்கு வருகை தந்தார்.

மாநாட்டை முடித்துக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில், பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நொறுங்கிப் போகும்

தேநீர் விருந்துக்குப் பிறகு, எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு எவ்வளவு ஒழுக்கமாகவும், ஒரு குப்பை கூட இல்லாமலும் நடந்தது என்பதை எனது சமூக வலைதளப் பக்கங்களில் படத்துடன் பதிவிட்டுள்ளேன். தேசபக்தர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

ஆனால், நேற்று முன்தினம் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் நொறுக்கப்பட்டுள்ளன. மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. ஒரு மாநாடு நடந்த இடத்தையே அலங்கோலப்படுத்தும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாகும்? ஒழுக்கக் கேடான இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிப் போகும். இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய் பாடம் படிக்க வேண்டும்

மீனவர்கள் பிரச்சினை குறித்து நடிகர் விஜய் பேசியதாகக் கூறுகிறீர்கள். அது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு. அவர் இன்னும் விஷயங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினைக்கு காரணமே, 1974-ல் காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான். அது தமிழக மீனவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால், கடந்த 11 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மீனவர் மட்டுமே, அதுவும் மீன்பிடி தகராறில் இல்லாமல், கிரிக்கெட் போட்டி தொடர்பான விரோதத்தில் கொல்லப்பட்டார். மற்றபடி ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

3 மடங்கு அதிக நிதி

நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்குக் கொடுத்த நிதியை விட, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதியையும், திட்டங்களையும் வழங்கியுள்ளது.

மேலும், தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழை வளர்ப்பதற்காக மகாகவி பாரதியாருக்கு இருக்கை அமைத்தவர் பிரதமர் மோடி. ஆனால், மத்தியில் பல ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. தமிழுக்கு என்ன செய்தது? எனவே, தமிழக மக்கள் இதுபோன்ற சினிமா வசனங்களை நம்பி ஏமாற மாட்டார்கள்” என தெரிவித்தார்.