தமிழ்நாடு

தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு..? விஜய் போடும் மாஸ்டர் பிளான்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு..? விஜய் போடும் மாஸ்டர் பிளான்
ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்ததையடுத்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சமீபத்தில்  பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.

 கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்தார். ஜனவரி 29-ஆம் தேதி  இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

இதில், விஜய் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த பட்டியலை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் 19 பேருக்கும்  நியமன ஆணையுடன் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் குறித்து கட்சி தலைமைக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என எச்சரித்த விஜய்,  கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். 

தொடர்ந்து,  அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா கடந்த 29-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததாக கூறப்பட்டது. 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பணி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும்  முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாகவும்,  தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியான அதிகார மிக்க பதவியை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில்  அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனா செயல்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.