தமிழ்நாடு

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை-அமித்ஷா

சென்னை தி.நகரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் இறந்த நேரம் மாலை 5.11 மணிக்கு "மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சி.பி.எம் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு மதவெறி எதிர்ப்பு உருது மொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சி.பி.எம் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,  இந்திய நாட்டை மத வெறி சக்திகள் ஆளும் நிலை ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று ஒவ்வொரு நாளும் அனுபவித்து கொண்டு உள்ளோம். மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை நோக்கி போராடினார், அப்போதெல்லாம் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ஆனால் விடுதலை அடைந்த பிறகு ஒரு சில மணி நேரங்களிலேயே அவரை கொலை செய்யும் கொடூரம் நடந்தது. 

வெளி உலகுக்கு ஜனவரி 30 -ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டும்தான் தெரியும். ஆனால் ஏழுமுறை அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது.  ராமனை வழிபட்டுக் கொண்டிருந்த வழிபாட்டுக்கூடம் என்று கூட பார்க்காமல் அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து படுகொலை முயற்சி ஏற்பட்ட போது அவரை பாதுகாக்க முடிந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 

எப்போதும் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்து எப்போதும் உயிர் போக தான் போகிறது என்று இருந்தார்.  இந்த நாட்டில் மதவெறி சக்திகள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய சேதம் சாதாரணமான சேதம் அல்ல.  இந்தியாவில் பல போர்கள், நோய்களில் உயிரிழப்பவர்களை விட மத ஜாதி கலவரங்களில் மாண்டவர்கள் அதிகம் என்பதை பார்க்கிறோம். 

மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து விடுதலைக் கிளர்ச்சியில் பங்கு இல்லை, ஏகாதிபத்தியத்திற்கு சேதம் செய்யும் அமைப்பாக இருந்தது. மத பிரிவினையை உண்டாக்கி ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் தான் இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸும். அவர்கள் விதைத்த விதைதான் ஒன்றாக இருந்த இந்தியா இரண்டு கூறுகளாக இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிந்து உள்ளது. 

கடைசி வரை மகாத்மா காந்தி இந்த தேசத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று எவ்வளவோ போராடினார் ஆனால் வெற்றி பெற முடியவில்லை. கடைசியாக மதவெறி சக்திகள் வெற்றி பெற்று இந்தியா- பாகிஸ்தான் என்று பிரிந்தது. இந்தியாவிற்கு பகைநாடு என்றால் நம்மில் இருந்த பிரிந்த பாகிஸ்தான். ஆர்.எஸ்.எஸ்-ஆல்  பயிற்றுவிக்கப்பட்ட கோட்சே நான் கொலை செய்யவில்லை என்று மறுக்கவில்லை. 

நான் மகாத்மா காந்தியை கொலை செய்ததை பெருமையாக கருதுகிறேன் என்று சொன்னதற்கு எப்படிப்பட்ட மதவெறி அவருக்கு ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும். மதம் அரசியலில் கலக்கக்கூடாது. ஆட்சியில் இருக்கக் கூடாது. மத சார்புள்ள நாடு என்று இந்தியா இருக்க கூடாது என்று வற்புறுத்தியவர் காந்தி.

அம்பேத்கருக்கும், காந்திக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தபோதும் அமையும் ஆட்சியில் அமைச்சராக அம்பேத்கர் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்து ராஷ்டிரம் என்று இந்தியா அறிவிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள், இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதரர்கள் என்று காந்தி சொன்னதுதான் அவரை கொலை செய்ய காரணம்.

இந்த நாட்டின் மதச்சார்பின்மை அடையாளத்தை அழிக்கும் பணியை செய்து இருக்கிறார்கள். நாளை நாடாளுமன்றம் கூடும்போது வக்பு திருத்த மசோதாவை முன்மொழிய இருக்கிறார்கள். அவசர அவசரமாக நாளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொன்ன மாற்றங்களை விட்டுவிட்டு தாக்கல் செய்ய உள்ளார்கள்.

இந்து அறநிலையத்துறை சொத்துக்களையும், வக்ப்போர்டு சொத்துக்களை கைப்பற்ற நினைப்பது போல் கைப்பற்ற நினைக்கிறார்கள். அறநிலையத் துறைக்கு சொந்தமான சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்க காரணம் இந்து அறநிலையத்துறை இருப்பதுதான். அறநிலையத்துறை சொத்துக்கள் தனியாரிடம் இருந்ததன் காரணமாக அது சூறையாடப்பட்டது. அவற்றை பாதுகாக்க தான் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

பாஜக அரசு கல்வி மீது தொடுத்துள்ள தாக்குதலை நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால் இந்தியாவின் எதிர்காலம் தலைகீழாக மாறிவிடும். மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று கூட வரலாற்றை மாற்றி விடுவார்கள். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அடுத்த ஆண்டுக்குள் 15 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்கள். பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு இந்து ராஷ்டிர அடிப்படை சொல்லி கொடுக்க முயல்வது சரி அல்ல.

இந்த தேச தந்தை நினைவு தினத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை பொதுமக்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்வாக மாற்றி இருப்பது மதவாத சக்திகளுக்கு வெற்றியாக தான் பார்க்க முடிகிறது. இது போன்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை வரும் காலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். மதசார்பற்ற அரசியல் சாசனம் என்று இன்றும் இருப்பதை நாம் காக்க வேண்டும். மதசார்பற்ற தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்து மகாத்மா காந்தி விரும்பும் தேசத்தை உயர்த்தி பிடிப்போம்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய செல்வப்பெறுந்தகை, உலகத்தில் ஏராளமான சிலைகள் வைத்து வழிபடும் தலைவராக மகாத்மா காந்தியை பார்க்கிறார்கள்.  இந்த நாட்டின் பிரதமர் எந்த தேசப்பிதா விடுதலை வாங்கி தந்தாரோ, அட்டல் பிரோ எடுத்த திரைப்படம் ஒன்று வந்த பிறகுதான் மகாத்மா காந்தி யார் என்று தெரிகிறது என்று உளறுகிறார் .இதைவிட தேசத்தில் கொடுமையான செயல் நடக்குமா? இதை சொல்வது ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜக தலைவர் அல்ல இந்த தேசத்தின் பிரதமர் சொல்கிறார்.

நம் பிரதமர் வரலாற்றை திரித்து பேசுகிறார். மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தி அவர் இடத்தில் வீர சாவர்க்கர் உட்கார வைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு. தமிழ்நாட்டுக்கும் இந்த தேசம் முழுவதுக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்து கொண்டுள்ளது. சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி  ஆட்சி பொறுப்பு வேண்டாம் என்று ஜவஹர்லால் நேருவை முதல்வராக்கினார். ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள்  மகாத்மா காந்தியை இழிவு படுத்துவது வழக்கமாக உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை எதிர்க்க வேண்டும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,  இன்று ஆளுநர் பேச்சு கிராமங்களில் சொல்வது போல் ஆடுகளை பார்த்து ஓநாய் அழுகிறது என்று சொல்வது போல் மகாத்மா காந்தி பற்றி ஆளுநர் பேசுவது தான் மிகப்பெரிய வேடிக்கை.  இந்திய தேச மக்கள் ஒன்று மட்டும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் என்று, அவர் வழக்கில் ஈடுபட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து சிறைவாசம் இருந்தவர் யார் என்று தெரியும்.

மகாத்மா காந்தியை தவறுதலாக சித்தரித்தாலோ, அம்பேத்கரைப் பற்றி தவறாக பேசினாலோ அதை கண்டிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாடாளுமன்றத்தில் அமித்ஷா இழிவுப்படுத்தி பேசி உள்ளார். விமானநிலையத்தில் நாங்கள் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் கத்திப்பாராவில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஜனநாயக கடமையாற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு.

காவல்துறை சட்டத்திட்டங்களை மதிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில் எங்கள் ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்ற வேண்டும். அமித்ஷா சட்டத்தின் தந்தையை தாறுமாறாக தவறாக பேசுகிறார். இந்த விசும்பு தனத்தை கண்டிக்க எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு. காவல்துறை அனுமதி மறுத்தால் தடையை மீறி கருப்புக்கொடி காட்டுவோம். 

ஜல்லிக்கட்டு அனுமதி அளித்ததும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்ததும் பாஜக தான் என்று அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு, ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிப்பது. அதற்கு பணிந்து ஜல்லிக்கட்டு அனுமதி கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். 

மக்களுக்காக முதலமைச்சராக இருக்கிறேன். இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் சட்டப்பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றால் டங்ஸ்டன் ஏலத்தை கொண்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் சொன்னார், மக்கள் போராட்டம், அரசு முன்னெடுப்பு வென்றிருக்கிறது என்று கூறினார்.