தமிழ்நாடு

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் நேற்று அக்டோபர் 2ஆம் தேதிமது ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய திருமாவளவன், புத்தர், மகாத்மா பூலே, அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், நாராயண குரு போன்றவர்களின் வழியில் வந்தவன் என்பதால், எனக்கு இந்த சிந்தனை இருக்கிறது. நாங்கள் சாதிப் பெருமை, மதப் பெருமை பேசுபவர்கள் அல்ல. புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்.

இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமானது. இதுவரை நமது மாநாடுகளில் பயன்படுத்தாத ஒரு உருவம் இந்த மாநாட்டில் பயன்படுத்தியிருக்கிறோம். அதுதான் தேசப்பிதா மாகாத்மா காந்தியின் உருவம். இன்னொருவர் மூதறிஞர் ராஜாஜியின் உருவம். காந்தியின் மது விலக்கு, மதச்சார்பின்மை ஆகிய இரண்டு கொள்கையில் வி.சி.க-வுக்கு உடன்பாடு உண்டு.

புத்தர் மது அருந்தக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, கொலை செய்யக் கூடாது, வரைமுறையற்ற காமம் கூடாது என போதித்தார். இதில் முக்கியமானது மது அருந்தக் கூடாது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக மாந்தார் எல்லோருக்குமானது. அவருடைய கொள்கையை பின்பற்றி இந்தியா முழுவதும் மது விலக்கு வேண்டும்” என்றார்.

இந்நிலையில், தன் வாழ்நாள் எல்லாம் ஒழிப்பை உயிர்மூச்சாக வலியுறுத்தியவர் காந்தியடிகள் அவரது பிறந்தநாளில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் அவருக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

காந்தியடிகளின் 156ஆவது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 49வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலில் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் நேரடியாக காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.

திருமாவளவனின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “விசிக தலைவர் திருமாவளவன் இன்று காந்தி மண்டபத்தைத் தாண்டி சென்று காமராஜரின் நினைவகத்திற்கு தான் முதலில் மரியாதை செலுத்தினார். காமராஜருக்கு அவர் மரியாதை செலுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி.

ஆனால் அதற்கு ஏன் காந்தியடிகளின் சிலையைத் தாண்டி சென்று அவர் மரியாதை செலுத்த வேண்டும்? ஒரு வேலை அவருக்கு, 'நாம் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் ஆனால் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை' என்ற குற்றவுணர்ச்சியால் அவர் அப்படிச் செய்திருக்கலாம்” என்றார்.

இந்நிலையில், இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாதது குறித்து கூறிய அவர், “ஆளுநர் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆளுநர் எப்போது வருவார் என்றபோது 10.30 மணிக்கு என்றனர். மாநாட்டையொட்டி உளுந்தூர்பேட்டைக்குச் செல்லவேண்டும் என்பதால் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம்” என்றார்.