தமிழ்நாடு

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை...அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை...அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வானதி சீனிவாசன்
நாடகமாடும் பாகிஸ்தான்

பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அண்டை நாடான பாகிஸ்தான், எப்போதுமே இந்தியாவுடன் நேரடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பயங்கரவாதிகளை ஏவிவிட்டு, அவர்கள் வாயிலாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இப்படி பாகிஸ்தான் தூண்டுதலில், பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம், இந்தியா கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகளின் ஆதரவைக் கோரும். ஆனால், "நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டு பாகிஸ்தான் நாடகமாடும்.

பயங்கரவாதிகள் தாக்குதல்

பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா கொடுத்தாலும், அதன் மீது ஐக்கிய நாடுகள் சபையும், மற்ற நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. எடுக்க முடிந்ததும் இல்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பரில், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 160 பேர் கொல்லப்பட்டனர்.

அன்றைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, எதிர் தாக்குதல் நடத்தாமல், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளை அணுகியது. இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும், பாகிஸ்தானின் பயங்கரவாத பின்னணியை அம்பலப்படுத்தின. பாகிஸ்தான் தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

திமுக அரசு வேடிக்கை பார்க்க கூடாது

ஆனால், இந்தியாவில் இருக்கும் பாஜக எதிர்ப்பாளர்கள், பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு, இந்தியாவையும் இந்திய ராணுவத்தையும் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், தமிழ்த் தேசிய இயக்கத்தை சேர்ந்த தியாகு என்பவர், "பயங்கரவாதிகளின் தாக்குதலையும் கண்டிக்கிறோம். பாகிஸ்தான் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.

இந்திய அரசின் தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என்று பயங்கரவாதிகளின் தாக்குதலையும் இந்திய ராணுவத்தின் தாக்குதலையும் ஒன்றுபோல, ஒற்றுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்த பேச்சு தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயல். ஒரு காலத்தில், வன்முறையை கையாண்டு, அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தான் இந்த தியாகு. அப்படிப்பட்டவர், 140 கோடி மக்களையும் காப்பதற்காக, இந்திய ராணுவம் உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் போது, அதனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதை ஏற்க முடியாது. இதை எதுவும் நடக்காது போல திமுக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை தேவை

இந்தியா போன்று 140 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை, சிறு சிறு பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, அதன் வாயிலாக தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவதை எத்தனை காலத்திற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இந்தியா எப்போதும் போரை விரும்பியது இல்லை. ஆனால் எத்தனை காலத்துக்கு தான் அடி வாங்கிக் கொண்டே இருக்க முடியும்? இந்திய ராணுவம் போரை முன்னெடுக்கவில்லை. அப்பாவி பொதுமக்களை கொண்டு குவித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, எதிர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். 140 கோடி மக்களை காக்க இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் அரசியல், மதம் சாதி மொழி இனம் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த தருணத்தில் பாஜக எதிர்ப்பாளர்கள், தங்களது தேச விரோத முகத்தை காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதை வழக்கம் போல அரசியலாக தமிழக அரசு கடந்து விடக்கூடாது. குறிப்பாக காவல்துறை கடந்து விடக்கூடாது. இந்திய ராணுவத்திற்கு எதிராக நாட்டை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.