தமிழ்நாடு

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!
பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்ற மகளிர்க்கான மருத்துவ முகாமினைத் துவக்கி வைத்த பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 'பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது' என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க-வின் எதிர்கால அரசியல் திட்டம்

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், அரசியல் என்பது சேவை என்ற மனப்பான்மையோடு பா.ஜ.க. செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசாக, தமிழகச் சட்டமன்றத்தில் இரட்டை இலக்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார். "எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கள் கட்சித் தலைவரைத் தான் பார்க்கிறார்கள். மற்ற கட்சித் தலைவர்களைப் பார்க்கவில்லை, இதில் சந்தோஷம் தான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசனின் விமர்சனம்

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'பச்சை பஸ் (அதிமுக) மற்றும் மஞ்சள் பஸ் (பா.ஜ.க) ஆகியவற்றை பிங்க் பஸ் (மகளிர் இலவசப் பேருந்து) ஓவர்டேக் செய்துவிடும்' எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், "பிங்க் பஸ் மூலம் பெண்களை ஏமாற்றலாம் என துணை முதலமைச்சர் நினைக்கிறார். அவர் முதலில் பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது. அதனை துணை முதலமைச்சர் நேரில் பார்க்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் பிங்க் பஸ் வருவதில்லை, வந்தாலும் பாதியில் நின்றுவிடுகிறது. பெண்கள் தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று விமர்சித்தார்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாகப் பேசிய அவர், "தேர்வும் நடத்துவோம், நீதிமன்றத்தில் தடையும் வாங்குவோம் என்றால், அதற்கு எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு? அரசு எதற்காக இதுபோன்ற வழக்குகள் வருகின்றன என்பதை ஆராய்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து முறையாகத் தேர்வுகளை நடத்த வேண்டும். தி.மு.க. அரசு போலவே தேர்வும் இருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.