தமிழ்நாடு

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விளக்கமளித்தார். 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. பெண்களை பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்கள் பாதுகாப்பில் முக்கியத்துவம் செலுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு தேநீர் கடை ஊழியர் ஒருவர் பாலில் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி தங்கும் விடுதியில் தங்கி படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தேநீர் குடிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். 

அப்போது, பேக்கரி கடையில் வேலை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற நபர் அம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில்  பேக்கிரி ஊழியர் ஸ்ரீராமை போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக  சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (ஜன. 14) மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்த போலீஸார் சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சென்னை ஐஐடி வழங்கும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.