தமிழ்நாடு

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!
மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!
சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மயிலாப்பூரில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 83 Tydol மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்குதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ.அருண் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், பல்வேறு காவல் மாவட்டங்களில் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (செப். 9) காலைச் சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். அவர்களைச் சோதனை செய்ததில், அவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த Tydol என்ற உடல் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மயிலாப்பூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர்களான சந்தோஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 83 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே தலா இரண்டு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சட்ட விரோதமாக மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று மாலையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.