தமிழ்நாடு

தவெக பூத் கமிட்டி மாநாடு.. அனுமதியளிக்காததால் ஆத்திரமடைந்த தொண்டர்கள்.. கோவையில் பரபரப்பு

கோவையில் விஜய், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆத்திரத்தில் கல்லூரி வாயிலை அடித்து உடைத்து தவெக பூத் கமிட்டி மாநாட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக பூத் கமிட்டி மாநாடு.. அனுமதியளிக்காததால் ஆத்திரமடைந்த தொண்டர்கள்.. கோவையில் பரபரப்பு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் தங்களது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை வலுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்தி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை குருப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. இன்று, கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை 3 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மாலை 5 மணிக்கு வருகை தந்தார்.

விஜய்யைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கல்லூரிக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், கல்லூரி வாயிலை அடித்து உள்ளே நுழைய முயன்றனர். மேலும், அங்கிருந்த வாழைப் பழங்களை எடுத்து வீசத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ரசிகர்களை விரட்டியடித்தனர். இதனால், காவல்துறையினருக்கு எதிராக ரசிகர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.