தமிழ்நாடு

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை... 1,100 சிறப்புப் பேருந்துகள்... பொதுமக்களுக்கு குட் நியூஸ்!

TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை... 1,100 சிறப்புப் பேருந்துகள்... பொதுமக்களுக்கு குட் நியூஸ்!
காலாண்டு விடுமுறை - சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

TNSTC Special Bus Announcement : தமிழகம் முழுவதும் பள்ளிக்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 7ம் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று அறிவிப்பு வெளியானது. இதனை முன்னிட்டு காலாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளை (செ.27) முதல் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், நாளை இறுதி நாள் என்பதாலும், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 27, 28ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு 740 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு 140 பேருந்துகளும், சென்னை மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மொத்தம் 1100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.2-ம் தேதி மகாளய அமாவாசை நாள் என்பதால், அதனை முன்னிட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அக்.1-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், அக். 2ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க, குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.