தமிழ்நாடு

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!
Pongal Gift Package
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் சட்டபேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பரிசுத் தொகுப்பிற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு

அதிமுக ஆட்சியின்போது 2021 ஆம் ஆண்டு ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்ட நிலையில், 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசு ₹1,000 ரொக்கப் பணம் வழங்கியது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நேற்று ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் தொகை ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்குக் குழப்பம்; உறுதிப்படுத்தும் அதிகாரிகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டதால், இந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாதா என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், ரூ.248 கோடி என்பது பரிசுப் பொருட்களை முன்கூட்டியே கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தொகைதான் என்றும், ரொக்கப் பணம் வழங்குவது குறித்து நிதித் துறையுடன் முதலமைச்சர் கலந்து பேசி இறுதி முடிவை அறிவிக்கலாம் என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ரொக்கப் பணத்தின் தொகையானது ரூ.2,000 அல்லது ரூ.3,000 என இருக்கலாம் என்று அரசு கணக்கிட்டு வருவதாகத் கூறப்படுகிறது. ரொக்கப் பணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.