தமிழ்நாடு

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!
ADGP Devasirvadam explains
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (செப். 27) கரூரில் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் சதி நடந்ததாகத் தவெக தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விளக்கம்

கரூர் பிரசாரக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்தார். "கரூரில் தவெக பிரசாரத்திற்கு ஒரு எஸ்.பி., 3 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 58 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர், மேலும் ஐஜி கண்காணிப்பில் இருந்தார். இதுமட்டுமல்லாமல், திருச்சி பிரசாரத்தின்போது 650 போலீசாரும், பிற மாவட்டக் கூட்டங்களுக்கு அதற்கேற்ப போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விதிகளின்படியே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். எந்த அமைப்பாக இருந்தாலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் போதிய பாதுகாப்பு தர முடியும். பிரசாரத்தில் நெரிசல் ஏற்படுவதை அறிந்த போலீசார் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்தனர். போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன" என்று அவர் தெரிவித்தார்.

சதி, கல் வீச்சுப் புகாருக்கு மறுப்பு

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன என்றும், திட்டமிட்டு சதி நடந்துள்ளது என்றும் தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து ஏடிஜிபி பேசுகையில், தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

பிரசார இடம் குறித்து காவல்துறை பரிந்துரை

கூட்டம் நடைபெற்ற இடம் குறித்த விவரங்களை ஏடிஜிபி வெளியிட்டார். "தவெகவினர் முதலில் கேட்ட லைட் அவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தானது. இரண்டாவதாகக் கேட்ட உழவர் சந்தைப் பகுதி மிகவும் குறுகலானது" என்று தெரிவித்தார்.

அதற்கு மாற்றாக, காவல்துறை சார்பில் ஏற்கெனவே அதிமுக பிரச்சாரம் நடந்த இடத்தை தவெகவுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, காவல்துறை பரிந்துரையை ஏற்றுக்கொண்டே வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்துக்குத் தவெக அனுமதி பெற்றது என்றும் அவர் விளக்கமளித்தார். கரூர் ரவுண்டானாவிற்கு விஜய் வரும் போதே மாலை 6 மணி ஆகிவிட்டது என்றும் இதனால் கூட்டம் சேர்ந்தது என்று அவர் தெரிவித்தார்.