தமிழ்நாடு

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் பிரச்னைகள் குறித்தும், தமிழக அரசையும் அன்றாடம் விமர்சனம் செய்து வந்தார். இதில் வீடியோ வெளியிடுவதால் அவ்வப்போது, காவல்துரை இவர்மீது வழக்குகளை தொடர்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சூழலிலும் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நாம் தமிழர் தொடங்கப்பட்ட காலக்கட்டதில் தமிழக இளைஞர்களிடையே சீமானின் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் இளைஞர் நிறைந்த கட்சியாக நாதக திகழ்ந்தது. ஆனால், சமீபத்தில் நாதகவில் இருந்து ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து, நடிகையின் வழக்கு, பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு போன்ற பிரச்னைகளில் சீமானுக்கு நாதகவின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது ஆதரவை தனது சேனல் மூலம் அளித்து வந்தார்.

Image

இந்நிலையில், சாட்டை துரைமுருகனுக்கும், சீமானுக்கு தொடர்பில்லை என்று சீமான் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து, அந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்திலும், இரு கைகளையும் கூப்பியவாறு உள்ள எமோஜியை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.. அந்த அறிக்கையில், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் வருகிற கருத்துகள்-செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சாட்டை துரைமுருகனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய போது, நாதகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.