ரயில் நிலையங்களில் வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்சக் கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில் கண்டிருப்போம். தங்கள் சொந்த மாநிலங்களில் பிழைக்க வழியில்லாமல் ரயில்களில் டிக்கெட் கூட எடுக்காமல் கூட்டம் கூட்டமாக வருவது இன்றளவும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் குறைந்த சம்பளத்திற்கு வட மாநிலத்தவர்கள் வேலை பார்ப்பதால் தமிழர்கள் பாதிக்கப்படுவது பேசு பொருளாகவே இன்றும் இருந்து வருகிறது. இந்நிலையில் புலம்பெயர்ந்து வந்த வட மாநிலத் தொழிலாளிகள் சந்திக்கும் அவல நிலையை வெளிப்படுத்தும் சோக சம்பவம் சென்னையில் நிகழந்துள்ளது.
கடந்த மாதம் பத்தாம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து 11 விவசாயக்கூலிகள் ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். ஒப்பந்ததாரர் மூலமாக பொன்னேரியில் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களுக்கு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் மூன்று நாட்களாக காத்திருந்துள்ளனர். காத்திருந்தும் இவர்களுக்கு வேலை கிடைக்காததால் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு வந்துள்ளனர்.
கையில் காசு இல்லாமல் டிக்கெட் கூட எடுக்காமல் ரயிலில் வந்த வடமாநில விவசாயக் கூலிகள் சம்பாதித்து சாப்பிடலாம் என நினைத்தவர்களுக்கு வேலை கிடைக்காததால் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பசியின் கொடூரத்தில் சொந்த மாநிலத்திற்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்து காத்திருந்து நான்கு விவசாயக் கூலிகள் மயக்கமடைந்து விழுந்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி மயங்கி விழுந்த நான்கு பேரையும், மற்ற விவசாயக் கூலிகளையும் ரயில்வே போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் ரயில் நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சையின் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக போலீசார் மேற்கு வங்க போலீசாருக்கு தகவல அளித்துள்ளனர். வேலைக்காக தமிழகத்திற்கு வந்து சிக்கிக் கொண்டவர்கள் தொடர்பான செய்தி மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸுக்கு சென்றது. அவரது சட்ட ஆலோசகர் மூலமாக கூலிகளுக்கு உதவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சட்ட ஆலோசகரின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சசிதரன் கவனத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சசிதரன் விவசாயக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் பண உதவி அளித்து சொந்த மாநிலம் திரும்ப நேரடியாக வந்து உதவி செய்துள்ளார். அந்த வகையில் பசி கொடுமையில் இருந்து மீண்ட விவசாயக் கூலிகள் 10 பேர் தங்களது சொந்த மாநிலத்திற்கு ரயில்கள் மூலமாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விமானம் மூலமாகவும் சென்றடைந்தனர்.
அதில் சமர்கான் என்ற 35 வயது விவசாய கூலி மட்டும் பசியின் கொடுமை காரணமாக சமைக்காத மீனை பச்சயாகத் தின்று பசியாற முயற்சித்துள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து மூளைக் காய்ச்சலால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு
மற்றவர்கள் சாப்பிட விவசாயத்தில் வேலை பார்க்கும் விவசாய கூலிகள் பசியால் மயங்கி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.