தமிழ்நாடு

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

ஓடும் ரயிலில்  தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை
ரயிலில் துணை நடிகையிடம் திருடிய காவலர்... ரயில்வே போலீசார் விசாரனை

சென்னை அண்ணா நகரை சேர்ந்த துணை நடிகை ஒருவர், பெங்களூருவில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று ரிசர்வ் கோச்சில் பயணித்து வந்துள்ளார். ரயிலானது அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது இளம்பெண் 6 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கிய பையை தோளில் மாட்டிக்கொண்டு அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதே கோச்சில் நின்று கொண்டு பயணித்து வந்த ஒருவர் திடீரென உறங்கிக் கொண்டிருந்த துணை நடிகை அருகே வந்து அவர் வைத்திருந்த பையை திருடி அவரது பைக்குள் மறைத்து வைத்துள்ளார். 

திடீரென கண்விழித்த அவர் உடனே அலறல் சத்தம் கொடுத்து, அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.  அப்போது அந்த நபர் பையை தூக்கி ஜன்னல் வழியாக வீசியுள்ளார். துணை நடிகையின் அலறல் சத்தம் கொடுத்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தூக்கி வீசப்பட்ட அந்த பையை திறந்து பார்த்தபோது  பையைத் திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து பிடிபட்ட அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பையை திருடிய நபர் ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றும் காவலர் வசந்தகுமார் என்பது தெரிய வந்தது.

 கடந்த 2013ம் ஆண்டு முதல் காவல் நிலையத்தில் வசந்தகுமார் பணியாற்றி வரும் நிலையில் தொடர்ச்சியாக ரயில் பயணத்தை அவர் மேற்கொண்டதும் தெரியவந்தது. சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வசந்தகுமார் போலீஸ் எனக்கூறி ரிசர்வ் கோச்சில் பயணித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பயணம் செய்து வந்தபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த துணை நடிகை பையை திருடியதும் தெரியவந்துள்ளது.

ஆனால் போலீசாரிடம் பை அழகாக இருந்ததால் தான் திருடியதாகவும், உள்ளே நகைகள் இருந்தது தனக்கு தெரியாது எனவும் வசந்தகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதே போல எத்தனை முறை வசந்தகுமார் கைவரிசை காட்டியுள்ளார்? பையில் நகைகள் இருப்பதை அறிந்து காவலர் கைவரிசை காட்டினாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கைதான காவலர் வசந்தகுமாரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.