தமிழ்நாடு

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் 'நலம்' என்ற பெயரில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புலியகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், 'கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்து குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனுக்காக வாரந்தோறும் நலம் என்கிற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் முகாமில் பி எஸ் ஜி மருத்துவமனை, உலக மலையாளிகள் அமைப்பு ஆகியோர் இணைந்து கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும மற்றும் உடல் கோளாறுகள் குறித்த சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசினார். சமீபத்தில் ஈரோட்டில் முதியவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். முன்னதாக திருப்பூரிலும் இதே போல் சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான செயலாக்கத் திட்டங்கள் இல்லாததால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் இதைப் பற்றி கவலைப்படாத தி.மு.க முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர்.

மத பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு கருத்து தெரிவித்து பயங்கரவாதத்திற்கு எதிரான மோடியின் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் பகல்காம் தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோவை மத பயங்கரவாதிகளின் தாக்குதலால் காவலர் செல்வகுமார், வீர கணேஷ், சசிகுமார் என மத பயங்கரவாதத்திற்காக பலரையும் பலி கொடுத்த இயக்கமாகும்.

மத பயங்கரவாதம் தமிழகத்தில் இல்லை என முதல்வர் சட்டப் பேரவையில் கூறுகிறார். அதற்கு தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பை நான் படித்துக் காட்டினேன். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஆல்கொய்தா இயக்கங்களோடு தொடர்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளதை நான் சுட்டிக் காட்டினேன். தமிழகத்தில் மத பயங்கரவாதம் இல்லை ஆனால் கோவையில் கார் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.

இளைஞர்களை மூளைச்சலவை செய்து மத பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட வைக்கின்றனர் .சில அரசியல் கட்சி தலைவர்களும் இதை ஆதரிக்கின்றனர். அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு மத பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது வேறு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வன்முறைக்கு ஆதரவாக செயல்படாமல் மத பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தமிழக அரசு துணை இருக்க வேண்டும். அதுவே இந்த மக்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கு தேவையான நீர் மற்றும் அவர்களுக்கான மானியத்தை வழங்கி தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் ப்ளீச்சிங் பவுடரின் தரத்தை மக்களே எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது போன்ற புகார்களை பொதுமக்கள் சொல்லும் போது புகார் அளிக்கும் நபர்கள் மீது மக்கள் பிரதிநிதிகள் ஏளனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை ஆகிய புலனாய்வு அமைப்புகள் செயல்பாடு குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ கூறிய கருத்திற்கு, இந்த புலனாய்வு அமைப்புகளால் அவரும் பாதிக்கப்பட்டவர் தான் அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவருக்கே தெரியும். மக்களை ஏமாற்றி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்கள் மீது கடந்த 12 ஆண்டுகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்கள் பணம் மீண்டும் மக்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைப்பற்றி அவர் ஏன் பேச மறுக்கிறார்.