தமிழ்நாடு

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையில் பேசிய முதலமைச்சர், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப திமுக அரசு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்பதாகவும், இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலங்களை விடவும் தமிழ்நாடு 9 புள்ளி 69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசு, மாநில ஆளுநர் ஆகியோர் பாம்பும், நரியுமாய் செயல்பட்டபோதும் தடைகளைத் தாண்டி தமிழகம் சாதனை படைத்துவருவதாகவும் கூறினார்.

அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும்; தொழிற்சாலை வளரும்; கல்வி மேம்படும்; பெண்கள் இளைஞர்கள் முன்னேற்றம் காணுவார்கள் என தெரிவித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அமைதிக்கு காரணம் தன் வசம் உள்ள காவல்துறைதான் எனக்குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தவர், செப்டம்பர் 6ஆம் நாள் இனி ஒவ்வொரு ஆண்டும் காவலர்கள் நாளாக கொண்டாடப்படும் என்பது உள்பட 102 அறிவிப்புகளை வெளியிட்டார்.

குற்ற சம்பவங்களில் பூஜ்ஜியம் வாங்க 100 விழுக்காடு முழுமூச்சோடு காவலர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், காவலர்களுக்கான தரவரிசை பட்டியல் செயல்படுவதில் உள்ள சிக்கல்களை களைய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் காலனி என்னும் சொல், அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

தனது உரையின் நிறைவில், தமிழகத்தில் இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் part 1 தான்..2026 தேர்தலுக்குப் பின் version 2.0 பார்ப்பீர்கள் என்றும், மாநில உரிமைகளுக்காக தன்னுடைய பயணம் தொடரும் எனவும் முதலமைச்சர் உறுதி தெரிவித்தார். முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வாக்கெடுப்புக்குப்பின்னர் சபாநாயகர் தெரிவித்தார்.

அப்போது முதலமைச்சரின் பதிலுரை தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், முதலமைச்சர் தனது உரையின்போது ஊர்ந்து வந்து என்று குறிப்பிட்டதை நீக்கக் கோரி எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர், வேண்டுமானால் தவழ்ந்து என்று மாற்றிக் கொள்ளலாம் எனக்குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, அரசு நிர்வாகம் தலை நிமிர்ந்து நிற்கிறதா தலை குனிந்து நிற்கிறதா என்று மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறிய ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாட்டில் எப்பவுமே part 2 failure தான் என்றார்.