தமிழ்நாடு

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்
தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தீவிரவாத தாக்குதல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. நாடே ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அனைத்து கட்சிகளும் உடன் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தமிழகத்தில் சிலர் மாற்று கருத்துக்களை சொல்வது வருத்தமளிக்கிறது.

எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எந்த வகையில் தீவிரவாதம் இருந்தாலும் அந்த வேரோடு வீழ்த்தப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமரின் வார்த்தைகள் நமக்கு பலத்தை சேர்க்கிறது. தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைவரின் கருத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் துணை வேந்தர்களை அழைத்து ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்.

மோதல் போக்கை கைவிட வேண்டும்

ஆளுநர் வேந்தர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தலாம். குடியரசு துணைத்தலைவரும் வந்து உள்ளார். வந்தவர்களுக்கும் வராதவர்களும் நன்றி என குடியரசு துணைத் தலைவர் சொல்லி விட்டார். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பது ஆளுநருக்கு தான் தெரியும். இந்த கூட்டத்திற்கு செல்லாமல் தடுத்தது தவறு. ஆளுநர் மாநிலத்தின் உள்ள அறிஞர்கள், வல்லுனர்களை அழைத்து கருத்துகளை பறிமாறலாம். அதில் தவறு இல்லை. துணைவேந்தர்கள் அரசு சொல்கிறப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால், பல்கலைக்கழகங்களை கிளை கழகங்களை மாற்றுகிறீர்களா. அரசியல் தலையீடு வருங்காலத்தில் இருக்கும் என்பதை முதல்வர் இப்போதே வலியுறுத்துகிறாரா? உணர்த்துகிறாரா? என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுகிறது. இந்த மோதல் போக்கை விட்டு விடவேண்டும்.

நாடு உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வெற்றிபெற்றதற்காக உயர்கல்விதுறை பாராட்டு விழா நடத்த உள்ளதாம். நீதிமன்றங்கள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, செந்தில்பாலாஜி உள்பட பல அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளார்களே நீதிமன்றம் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் அமைச்சர்கள் நீக்க முடியுமா? இது தவறான முன் உதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது. இது வருத்தத்திற்குரியது.

தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும்

ஆளுநர் மாநிலத்தின் முதல் குடிமகன். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று எல்லாம் அவருக்கு தெரியும். உளவுத்துறை மூலம் தடுக்கப்படுவதாக ஆளுநர் சும்மா சொல்லப்போவதில்லை. காவல்துறை, ஐபி அறிக்கைகள் அவருக்கு தெரியும். ஆளுநர் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை தமிழக அரசு தெளிப்படுத்த வேண்டும். துணை வேந்தர்கள் எல்லாம் ஏன் வரவில்லை என்பதையும், மிரட்டப்பட்டார்களா என்பதையும், காவல்துறை துணை வேந்தர்கள் இல்லத்திற்கு சென்றதா என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

கூட்டத்தில் கூட கலந்துக்கொள்ள விடவில்லை என்றால் அரசியல் சார்பு இல்லாமல் எப்படி பல்கலைக்கழகங்கள் நடத்தப்போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள் திமுகவின் கிளை கழகங்களாக மாறிவிடக்கூடாது.

எல்லாருக்கும் அக்கறை இருக்க வேண்டும்

தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் நாடு பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாற்று கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடு முழுவதும் ஒருங்கிணைத்து இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை ஆகும். தமிழக சட்டமன்றத்தில் கூட தீவிரவாதத்திற்கு மத்திய அரசு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்வது ஆரோக்கியமானது. அப்படி தான் சொல்லி ஆக வேண்டும். நாட்டு மீதும் மக்களின் பாதுகாப்பு மீதும் எல்லாருக்கும் அக்கறை இருக்க வேண்டும். ஒரு சிலர் தவறான கருத்துகளை சொன்னால் மன வருத்தத்தை தருகிறது. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது.அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.