அரசியல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா–அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
முதலமைச்சருக்கு பாராட்டு விழா

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வி மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் கோவி.செழியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக வேந்தர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டியதாக தெரிவித்தார்.

இத்தகையை சிறப்பு மிக்க நடவடிக்கையை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மே 3ம் தேதி மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு எனும் தலைப்பில் பாராட்டு விழா நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர்

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மசோதாக்கள் கிடப்பில் உள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்த ஆளுநரை நீக்க வழிவகை செய்யும் மசோதாவும் இதில் அடங்கும் என்பதால் பல்கலைக்கழக வேந்தராக இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.