தமிழ்நாடு

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!
சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!
சென்னை விமான நிலையத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, நாகல்கேணி சாரதி நகரைச் சார்ந்தவர் 49 வயதான கோமதி. இவரது கணவர் அசோக் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இன்று காலைக் கோமதி தனது மகள் பிரியதர்ஷினியுடன் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

கோமதியின் மகள் பிரியதர்ஷினி, சுவாமிக்கு அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனைத் தட்டு வாங்குவதற்காக வெளியே சென்றபோது, கோமதி திடீரென மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாகக் கோவில் நிர்வாகத்திற்கும், சென்னை விமான நிலைய காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் கோமதிக்கு முதல் உதவி அளிப்பதற்காக விரைந்து வந்தனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் கோமதி ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையக் காவல்துறையினர் கோமதியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கோமதி கடந்த மூன்று வருடங்களாக இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.