தமிழ்நாடு

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!

குடியாத்தம் அருகே 13 வருடங்கள் கழித்து, தங்கள் கிராமத்திற்கு வந்த பேருந்தைக் குத்தாட்டம் போட்டு பேருந்தினை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!
ஐயா...ஜாலி... எங்க ஊருக்குப் பஸ் வந்துடுச்சு.. 13 வருடக் காத்திருப்பைக் கொண்டாடிய பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர்.கிருஷ்ணாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. குடியாத்தம் பகுதியிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் அரசுப் பேருந்து கடந்த 13 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும், பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் அரசு மருத்துவமனைக்குச் செல்லவும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

பேருந்து நிறுத்தப்பட்டது குறித்தும், மீண்டும் பேருந்தை இயக்கக் கோரியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியை சந்தித்து தங்கள் கிராமத்திற்குப் பேருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தனர். கிராம மக்களின் புகார் மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்தை இயக்கும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்திற்கு அரசுப் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் கிராமத்திற்குப் பேருந்து வருவதை அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் குத்தாட்டம் போட்டுப் பேருந்து உற்சாகமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் பள்ளி மாணவர்கள் ஓட்டுநருக்குக் கைக்கொடுத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனமார நன்றி தெரிவித்தனர். மேலும் அந்தக் கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்திற்கு வாழை மரம் கட்டி, பூ வைத்துப் பொட்டு வைத்துப் பூஜைகளைச் செய்து, பூசணிக்காய் உடைத்து, அரசுப் பேருந்தைக் கிராமத்திலிருந்து அனுப்பி வைத்தனர்.

13 ஆண்டுகள் கழித்து கிராமத்திற்கு அரசுப் பேருந்து வந்ததால், பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது. தொடர்ந்து, தங்கள் கோரிக்கையை ஏற்று கிராமத்திற்குப் பேருந்து வர உதவிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிக்கு பொதுமக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.