தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி முதல்வர் கைது!

தருமபுரி அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி முதல்வர் கைது!
Private school principal arrested
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றின் உரிமையாளரின் மகன், அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பென்னாகரம் அருகே ஏரியூர் மற்றும் அழகா கவுண்டனூர் ஆகிய இரண்டு இடங்களில் அதியமான் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை தலைமை ஆசிரியர் கண்மலர் மற்றும் நடராஜ் தம்பதியினர் கடந்த 36 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்களது மகனான வினுலோகேஸ்வரன் (33), திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பள்ளியின் முழுப் பொறுப்பையும் கவனித்து வந்துள்ளார். இவரே பள்ளியின் முதல்வராகவும் (பிரின்சிபால்) இருந்துள்ளார்.

இதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரிடம், வினுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தகாத முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கடந்த இரண்டு நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் விசாரித்தபோது, மாணவி அழுதுகொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார்.

போலீஸ் நடவடிக்கை

இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் உடனடியாகப் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினுலோகேஸ்வரன் மீது புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, பாலியல் சீண்டலுக்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, வினுலோகேஸ்வரன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.