தமிழ்நாடு

சரோஜா தேவி மறைவு.. எளிதில் ஈடு செய்ய முடியாதது- முதல்வர் ஸ்டாலின்

நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சரோஜா தேவி மறைவு.. எளிதில் ஈடு செய்ய முடியாதது- முதல்வர் ஸ்டாலின்
CM Stalin condoles the death of actress Saroja Devi
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறை காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, நடிகை சரோஜா தேவி மறைவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவியின் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.

தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.