Rowdy Rohit Raj Grandmother Speech : சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோஹித் ராஜ். பிரபல ரவுடியான இவர் மீது ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த 3 வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி ரோகித் ராஜிற்கு நீதிமன்றம் மூன்று முறை பிடிவாரண்டு கொடுத்துள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அவர் கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று ரோஹித் ராஜை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, அவரையும் தாக்க முயன்றுள்ளார். இதனால் கலைச்செல்வி, தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித் ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: கோடிக்கணக்கில் மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..
இதில் காயம் அடைந்த ரோகித் ராஜ் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரோகித் ராஜ் மருத்துவமனையில் முழுமையாக குணமடைந்தவுடன் அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் பகுதி முழுவதும் தனது கண்ட்ரோலில் எடுக்க, கட்டப்பஞ்சாயத்து செய்தல், மாமுல் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பலரிடம் செல்போன் மூலம் 'பெரிய ரவுடி நான் தான்' எனக் கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் கேட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு ரவுடிகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இதை படித்தீர்களா..: பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது, என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் போலீசார் ரவுடிகளை சுட்டு பிடிப்பதும், என்கவுன்ட்டர் செய்வதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ராஜ்-இன் பாட்டி காணிக்கை மேரி, தனது பேரன் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் சுட்டு விட்டதாகவும், தேனியில் தனது பேரன் ரோஹித் ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் எப்படி டிபி சத்திரத்தில் தப்பித்து போலீசாரால் சுட முடியும் என சந்தேகம் எழுந்துள்ளது என குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே போலீசாரால் ரோஹித் ராஜின் கால் உடைக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எப்படி அவரால் தப்பித்து ஓட முடியும் என்றும் தொடர்ச்சியாக தனது பேரனின் மீது பொய் வழக்கு போட்டு வருவதால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.