தமிழ்நாடு

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!
தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெற்பயிற்களை அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் வழியாக விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், போதிய வசதி இல்லாத காரணத்தினால், ஆண்டுதோறும் பருவமழையினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து அரசிடம் விவசாயிகள் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாடபுரம் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தை சார்ந்து 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அங்குள்ள கிராமங்களில், விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளைந்த நெல் பயிர்களை லாடவரம் பகுதியில் உள்ள நேரடியாக அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழி இன்றி நெல் கொள்முதல் செய்யும் வரை நெல்மணிகளை வைத்து விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாகவும், கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து நெல் மூட்டைகளும் மழையின் காரணமாக நனைந்து மூட்டைகளில் இருந்து நெற்பயிர்கள் முளைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் இன்னல்களை அறிந்து மாவட்ட முழுவதும் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய பாதுகாப்புக்காக குடோன் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் சில பகுதிகளில் நெல்மணிகளுக்கு உரிய தொகை வழங்காமல் அலை கழிப்பதாகவும் இதன் மீது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.