தமிழ்நாடு

உலக பாரம்பரிய தினம்: பழமை வாய்ந்த மலை ரயிலை கெளரவித்த ரயில்வே துறை

உலக பாரம்பரிய தினத்தையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மலர்களால் அலங்கரித்து ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

உலக பாரம்பரிய தினம்: பழமை வாய்ந்த மலை ரயிலை கெளரவித்த ரயில்வே துறை
உலக பாரம்பரிய தினம்: பழமை வாய்ந்த மலை ரயிலை கெளரவித்த ரயில்வே துறை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வழியே ஊட்டி செல்லும் வகையில் தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசித்தபடி பயணிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இம்மலை ரயில் கடந்த 1899-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதன்முதலாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்டது. செங்குத்தான மலை மீது பல்சக்கரம் பொருத்தப்பட்ட இருப்பு பாதை வழியே நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த நீலகிரி மலை ரயில் பின்னர் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்தும் அதன் பழமை மாறாமல் இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயிலை கௌரவிக்கும் விதமாக கடந்த 2005-ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்நிலையில், மனித பாரம்பரியத்தை பாதுகாக்கவும், தொடர்புடைய அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலை ரயிலுக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது. கோடைகால சீசனை முன்னிட்டு வார விடுமுறை நாட்களில் காலை 9:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர் நூற்றாண்டை கடந்தும் பழமை மாறாமல் இயங்கும் மலை ரயிலை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறை சார்பில் கேக் வெட்டப்பட்டது. இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்ட மலை ரயிலில் மிகுந்த உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பயணித்தனர்.