தமிழ்நாடு

பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை
பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி லட்சுமி (42) என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

திடீரென அவர்கள் இருவரும் லட்சுமியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் நிலைக் குலைந்து கீழே விழுந்த லட்சுமி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து லட்சுமி புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி பகுதியில் ஜோலார்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதன் காரணமாக போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பெண் போலீஸ் லட்சுமி கழுத்தில் இருந்து 11 சவரன் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.