இந்தியா

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு
முதியவரை தரதரவென்று இழுத்து சென்ற மருத்துவர்
முதியவர் மீது தாக்குதல்

மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி 77 வயது முதியவர் ஒருவரை மருத்துவர் இரக்கமின்றி அடித்து இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதியவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் அடைத்து வைப்பதாக அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உதவ்லால் ஜோஷி என்ற முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியை நரம்பு கோளாறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.அங்கு அதிகளவில் நோயாளிகள் வரிசையில் மருத்துவரை பார்க்க காத்திருந்துள்ளனர்.அதிகளவில் கூட்டம் இருந்ததால் எரிச்சலடைந்த மருத்துவர், ஏன் இவ்வளவு பேர் வரிசையில் நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து ஜோஷி விளக்க முயன்றபோது, மருத்துவர் அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மருத்துவர் அவரை மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள காவல் நிலையத்தை நோக்கி இழுத்துச்சென்றுள்ளார்.

மருத்துவர் என்னை உதைத்து சட்டையை பிடித்து இழுத்துச்சென்றார்.அவர் என்னை அறைந்ததால் என் கண்ணாடி உடைந்தது. என் சட்டையை கிழித்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதில் என் மனைவியும் தாக்கப்பட்டார் என்று ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மருத்துவரின் செயலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சம்பவ இடத்தை விட்டு மருத்துவர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு உத்தரவு

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், “இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளது. முதலில், நோயாளி அநாகரீகமாக நடந்து கொண்டதாக மருத்துவர் கூறினார். இருப்பினும், வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, விசாரணைக் குழு உறுப்பினர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்” தெரிவிக்கப்பட்டுள்ளது.