தமிழ்நாடு

நட்பாக பழகி சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்.. ஷாக்கான தொழிலதிபர்!

கோவையில் சொகுசு காருடன் தலைமறைவான யூடியூபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நட்பாக பழகி சொகுசு கார்களுடன்  தலைமறைவான யூடியூபர்.. ஷாக்கான தொழிலதிபர்!
நட்பாக பழகி சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்.. ஷாக்கான தொழிலதிபர்!
கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல பால் பண்ணையில் மேனேஜராக பணிப்புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது நிறுவனத்திற்கு வீடியோக்கள் மூலம் விளம்பரம் செய்வதாக கூறி கோவை மணியக்காரன் பாளையம் அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தை வேலுவின் மகன் சந்தோஷ் குமார் என்பவர் தான் யூடியூபர் என்று கூறி அறிமுகம் ஆகி உள்ளார்.

அதன் பிறகு வேறு சில யூடியூப் விளம்பரம் செய்யும் நபர்களையும் அழைத்து வந்து பால் பண்ணைக்கு உரிய விளம்பரங்களை செய்து உள்ளார். மேலும் சந்தோஷ், தான் கார்ஸ் கல்சர் இந்தியா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு வருவதாகவும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார் .

அதேபோல் சொகுசு கார்களில் உதிரி பாகங்கள் மார்க்கெட்டில் விலை அதிகமாக இருக்கும் என்றும் தனக்கு இருக்கும் தொடர்பு மூலம் வாங்கினால் குறைந்த விலையில் அவற்றை வாங்க முடியும் எனவும் நம்பும்படி கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து பால் பண்ணை மேனேஜர் தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான ஆடி மற்றும் பென்ஸ் கார்களில் சிறிய பிரச்சனை உள்ளது என சந்தோஷிடம் கூறியுள்ளார். அப்போது சந்தோஷ் தான் அவற்றை சரி செய்து தருவதாக கூறியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி ஆடி காரையும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து பென்ஸ் காரையும் சரி செய்து தருவதாக கூறி எடுத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வினோத்குமார் இடம் இருந்து சந்தோஷ் வாங்கிச் சென்றுள்ளார். பிறகு பல நாட்கள் ஆகியும் சந்தோஷ் எடுத்துச் சென்ற சொகுசு கார்களை திருப்பி தராமல் இருந்து உள்ளார்.

வினோத்குமார் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிப்புரிபவர்கள் சந்தோஷை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவர் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படும் முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்தவர்கள் சந்தோஷ்குமார் ஏற்கனவே பலபேரிடம் மோசடி செய்து இருப்பதால் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்றதாக கூறி உள்ளனர்.

இதனால் வினோத்குமார் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் பால் பண்ணைக்கு சந்தோஷ் வந்து சென்ற சமயங்களில் அங்குள்ள நபர்கள் மற்றும் பால் பண்ணைக்கு வந்து சென்றவர்களிடம் நட்பாக பழகி பல லட்ச ரூபாய் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வினோத்குமார், கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சந்தோஷ் ஏற்கனவே பலரிடம் இதேபோல் மோசடி செய்து இருப்பதும் அது குறித்த புகார்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்து இருப்பதும் தெரியவந்தது. நட்பாக பழகி தொழிலதிபரிடம் இருந்து சொகுசு கார்களுடன் யூடியூபர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.