தமிழ்நாடு

மக்களே ரெடியா இருங்க.. வெளுத்து வாங்கப்போகும் மழை..!

வட தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மக்களே ரெடியா இருங்க.. வெளுத்து வாங்கப்போகும் மழை..!
Rain alert for KTCC
தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 16, 17 ஆகிய தேதிகளில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வரும் 17 ஆம் தேதி முதல் வட தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ஜூலை 19 முதல் கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை மற்றும் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 16 ஆம் தேதி இரவு முதல், மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும், குறிப்பாக சென்னை மற்றும் வட தமிழகத்தில் மழை அதிகமாக இருக்கும். சென்னையில் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச மழைப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச மழைப்பொழிவு கிடைப்பது அரிதானது.

ஜூலை 19 முதல் 27 வரை கேரளா, கர்நாடக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழைப்பொழிவு இருக்கக்கூடும். அதனால் அப்பகுதிகளில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள், உங்கள் பயணங்களை அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.