தமிழ்நாடு

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
Man arrested for making bomb threat to Vijay's house
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவரும், நடிகருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டலை விடுத்த நபரைச் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் மற்றும் சோதனை

காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் உடனடியாக விஜய் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் தீவிரச் சோதனை நடத்தியதில், அந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது.

மிரட்டல் விடுத்தவர் கைது

மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷபிக் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது ஷபிக், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது பல்லாவரத்தில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்

முகமது ஷபிக் அளித்த வாக்குமூலத்தில், தான் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியானதைக் கண்ட பின்னரே, ஆத்திரத்தில் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது ஷபிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.