தமிழ்நாடு

'ஆபரேஷன் க்ளீன் கோவை': 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா பறிமுதல்.. 13 பேர் கைது!

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 'ஆபரேஷன் க்ளீன் கோவை': 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா பறிமுதல்.. 13 பேர் கைது!
Operation Clean Coimbatore
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 'ஆபரேஷன் க்ளீன் கோவை' திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் சோதனை மற்றும் பறிமுதல்

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், செட்டிப்பாளையம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செட்டிப்பாளையம், மலுமிச்சம்பட்டி, கோவில்பாளையம் ஆகியவற்றில் இன்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. 2 டி.எஸ்.பி, 10 காவல் ஆய்வாளர்கள், 400 காவலர்கள் அடங்கிய குழுவினர் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா, 8 ஆயுதங்கள், போலியான பதிவு எண் கொண்ட 46 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்திற்கு இடமான 55 பேர் உட்பட மொத்தம் 13 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும், மின்னணு பரிவர்த்தனை சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், “வெளி மாவட்டங்களில் இருந்து குற்றப் பின்னணி கொண்டவர்கள் கோவையில் அடைக்கலம் புகுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பிடிபட்டவர்களில் நான்கு பேர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளன. இதில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார்” என்றார்.

மேலும், “விசாரணைக்குப் பிறகுதான் போதைப் பொருட்கள் எங்கிருந்து வந்தது, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் செட்டிப்பாளையம், மதுக்கரை, சூலூர், நீலாம்பூர், கே.ஜி. சாவடி போன்ற பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சோதனையில் சிக்கியவர்களில் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களும் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி மீண்டும் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை கல்லூரிகளிலும் விடுதிகளிலும் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.