தமிழ்நாடு

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

 விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி
வீடு ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மூட்டை தூக்கும் தொழிலாளி புகார்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரத்துக்குட்பட்ட நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் ராஜவேல் என்பவரின் மகன் சௌந்தர்ராஜன். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், கடந்த 2023ஆம் ஆண்டு விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் தனக்கு வீடு வேண்டி மனு கொடுத்துள்ளார்.

வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு

அவ்வாறு கொடுக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சௌந்தரராஜனுக்கு வீடு வழங்குவதாக அரசாணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு வழங்கப்பட்டதாகவும், வீடும் கட்டும் பணியை தொடங்குங்கள் என்று அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் சௌந்தர்ராஜன் சுமார் மூன்று லட்சம் செலவு செய்து, தனக்கு சொந்தமான இடத்தில் வீட்டிற்கான அடித்தளம் அமைத்துள்ளார்.

மூட்டை தூக்கும் தொழிலாளி அதிர்ச்சி

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சௌந்தரராஜனுக்கு அதிகாரிகள் வீடு வழங்காத நிலையில், மீண்டும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்துள்ளார். அப்போது அவரது ஆதார் எண்ணை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்ட சௌந்தரராஜனுக்கு வீடு வழங்கப்பட்டதாகவும், நான்கு தவணை பணம் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சௌந்தர்ராஜன் செய்வதறியாமல், கடன் வாங்கி வீட்டிற்கான அடித்தளம் அமைத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சௌந்தர்ராஜன் கூறுகையில், “அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், தனக்கு வீடு வழங்குவதாக கூறி தனது ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு வீடு வழங்கி உள்ளதாகவும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க சென்றால் தனது மனுவை வாங்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.