தமிழ்நாடு

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு.. திருநெல்வேலி அருகே பரபரப்பு!

திருநெல்வேலி அருகே காணாமல் போன பள்ளி மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு.. திருநெல்வேலி அருகே பரபரப்பு!
Missing school girl found dead
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி இஹாசினி, காணாமல் போன நிலையில், இன்று காலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பத்தமடை பகுதியை சேர்ந்த பன்னீர் தாஸ் மற்றும் சீதா தம்பதியரின் மகளான இஹாசினி, அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்த இஹாசினி, அதன் பிறகு காணாமல் போயுள்ளார். இது குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மாணவியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் இஹாசினியின் வீட்டிலிருந்து சற்று தொலைவில், குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத பாழடைந்த கிணற்றில், பள்ளிச் சீருடையுடன் ஒரு மாணவியின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர், கிணற்றில் கிடக்கும் சடலம் மாணவி இஹாசினியினுடையது என்பதை உறுதி செய்தனர். பின்னர், அப்பகுதி மக்கள், தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாணவியின் சடலத்தை மீட்டனர்.

இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஜூலை 19 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த மாணவி இஹாசினி, செல்போன் பயன்படுத்தியபோது அவரது தாயார் திட்டியதாகவும், அதனால் கோபமடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், காவல்துறையினர் தொடர்ந்து தெளிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).