தமிழ்நாடு

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்

ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்
Shocking Incident in Tambaram railway station
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில், நேற்று இரவு 8 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்தின் 3-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது நடைமேம்பாலத்தில் நின்ற ஒரு இளைஞர் திடீரென அங்கிருந்து மின்சார ரயிலின் மேல் குதித்தார்.

அடுத்த கணமே, உயர் அழுத்த மின்சாரம் அந்த இளைஞர் மீது பாய்ந்து அவரது உடலில் தீப்பிடித்தது. தீயில் கருகிய நிலையில், இளைஞர் ரயிலின் மேல் பகுதியில் துடிதுடித்தது காண்போரை பதறவைத்தது.

இதனையடுத்து, உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தாம்பரம் ரயில் நிலைய மூன்றாவது பிளாட்பார்மில் மின் இணைப்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ரயிலின் மேல் பகுதியில் எரிந்து கொண்டிருந்த இளைஞரை கீழே இறக்கி, அவசரமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மூன்றாவது பிளாட்பார்மிற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் மேற்கொண்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அந்த ரயிலில் இருந்த பயணிகள் இரண்டாவது பிளாட்பார்மில் நின்ற மற்றொரு மின்சார ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆரம்பத்தில் இளைஞரின் அடையாளம் தெரியாத நிலையில், அவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும், வடமாநில இளைஞரை போல் இருப்பதாகவும் கூறப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்:

ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சேகர் (37) என்பதும், இவர் ரம்மி சூதாட்டத்தில் ரூ.2 லட்சம் இழந்ததால் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த மனக்கவலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. சேகருக்கு 30% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.