தமிழ்நாடு

சீமானுக்கு எதிரான வழக்கு..வீடியோ ஆதாரங்களை பார்த்த பிறகு உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீமானுக்கு எதிரான வழக்கு..வீடியோ ஆதாரங்களை பார்த்த பிறகு உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில், நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

ஆனால் அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் கட்சித் தலைவர் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் ஆனால் சீமானின் பேச்சு அரசியலமைப்பை களங்கப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகாரில் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், சீமான் நீதித்துறை குறித்து கண்ணியகுறைவாக பேசியதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சீமான் பேசியதில் இந்த சம்பவம் மட்டும் தான் அவமதிக்கும் விதமாக உள்ளதா?

இவ்வாறு சீமானின் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் இது வரை நூற்றுக் கணக்கான வழக்குகளை தாக்கல் செய்யப்பட வேண்டி இருக்குமே என நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, சீமான் நீதித்துறையை அவமதித்தாக இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பதாக கூறி வழக்கை தள்ளி வைத்தார்.