தமிழ்நாடு

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!
சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!
யூடியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில் உள்ள வாடகை வீட்டில் தனது தாயார் கமலாவுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 24 ஆம் தேதி தூய்மை பணியாளர்கள் என கூறி கொண்டு சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி விட்டு டைனிங் டேபிள், படுக்கை அறை என, எல்லா இடங்களிலும், மனிதக் கழிவுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் அவரது தாயார் கமலா தரப்பில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்கள் எழும்பூர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இதற்கு சவுக்கு சங்கர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சம்பவம் நடந்த சவுக்கு சங்கர் வீட்டில் ஆய்வு செய்தனர்.
சுமார் 3 மணி நேரமாக சம்பவம் நடந்த சவுக்கு சங்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

தடயவியல்துறையினருடன் சென்று முக்கியமான தடயங்கள் மற்றும் அந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளனர். உண்மையிலேயே அவர்கள் தூய்மை பணியாளர்களா? என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுதினம் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் தொடர்ந்திருந்தார். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.