தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக 7 வணிகர்கள் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக 7 வணிகர்கள் ஆஜர்!
7 Members appear for CBI investigation for the third day
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக 7 வணிகர்கள் ஆஜராகி உள்ளனர்.

விசாரணையின் பின்னணி

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடரும் விசாரணை

கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள் முன்பு இதுவரை சம்மன் பெற்ற 15-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பொதுமக்கள், ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் என நான்கு பேர் ஆஜராகினர்.

நேற்று (நவ. 2) வேலுச்சாமிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஜவுளிக்கடை உரிமையாளர், செல்போன் கடை உரிமையாளர், மெக்கானிக் ஷாப் உரிமையாளர் என மொத்தம் 8 பேர் ஆஜராகினர்.

இன்றும் 7 பேர் ஆஜர்

இந்த நிலையில், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நகை அடகு கடை, எலக்ட்ரிகல் ஷாப், பேக்கரி, தனியார் இ சேவை மையம், மருந்து கடை உரிமையாளர்கள் உட்பட 7 பேர் இன்றும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். மேலும் விசாரணைக்கு இன்று வேறு சிலரும் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்று, கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.