தமிழ்நாடு

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு.. அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு.. அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!
Defamation against a judge
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்துச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரை, வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கச் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், த.வெ.க. தலைவர் விஜய் குறித்துக் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்துச் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்தனர். இதுதொடர்பாகச் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது மற்றும் சிறைத்தண்டனை

நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சசி (எ) சசிகுமார் ஆகிய மூவரைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சசிகுமார், அ.தி.மு.க. ஐ.டி. விங் பிரிவைச் சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் தாங்கள் கூறிய அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொளியைக் காவல்துறையினர் வெளியிட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற அக்டோபர் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் ராம்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயரம் குறித்தோ அல்லது நீதிபதி குறித்தோ அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.