தமிழ்நாடு

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குகளில் காவல்துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்த வழக்கு

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பின்னணி பின்வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பூசிவாக்கம் பகுதியில், பேக்கரி நடத்தி வந்த சிவா என்பவருக்கும், முருகன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் காவல்துறை ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ப. உ. செம்மல், தன் கடமைகளில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாகக் கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு உடல்நலக்குறைவு காரணமாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காவல்துறை தரப்பில் இந்தக் கைது உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தக் கைது உத்தரவு நீதிபதிக்கும், டிஎஸ்பி-க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை காரணமாகப் பிறப்பிக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உயர்நீதிமன்றம் டிஎஸ்பி-யை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

வழக்கறிஞர்களின் கண்டனம்

இந்த உத்தரவைக் கண்டு கொதித்துப்போன வழக்கறிஞர்கள், மாவட்டக் காவல்துறையைக் கண்டித்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குகளில், முறையாகச் சட்டத்தைப் பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டிக்கும் விதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது, என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், காவல்துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.