தமிழ்நாடு

இன்ஸ்டா காதலனுடன் சிட்டாய் பறந்த பெண்.. நாடோடிகள் பட பாணியில் ஸ்கெட்ச்!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சினிமா காட்சிகளை போல் நண்பர்களின் உதவியோடு காதலனுடன், பெண் சொந்த சகோதரி வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா காதலனுடன் சிட்டாய் பறந்த பெண்.. நாடோடிகள் பட பாணியில் ஸ்கெட்ச்!
Instagram Love Story Takes a Dramatic Turn: Woman Abducted from Sister Home
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23), சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்:

அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். பின்னர், குமரேசனின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்குச் சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குமரேசனும், அனுசியாவும் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் சில நாட்கள் ஒன்றாக தங்கியுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசியாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசியாவின் உறவினர்கள், அனுசியாவினை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும், அனுசியாவை கண்டித்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். அவரது பெற்றோர்கள் அதன் பிறகு, அனுசியாவை சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் கடந்த 10 நாட்களாகத் தங்க வைத்துள்ளனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்தத் தகவலை தனது காதலனுக்கு ரகசியமாகத் தெரிவித்துள்ளார்.

கத்தியுடன் களமிறங்கிய நண்பர்கள்:

இன்று, வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம், சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்திருக்கிறார் குமரேசன். தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன், தனது நண்பர்கள் மூவரை அனுசியா தங்கியிருக்கும் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் கையில் மஞ்சள் பை ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

குமரேசன் காருக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார். அவரது நண்பர்கள் சட்டை மற்றும் பேண்ட்டுக்குள் கத்திகளை மறைத்து எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுசியா, காதலனின் நண்பர்களைக் கண்டதும் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்.

அனுசியாவின் சகோதரி வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால், இதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள், குமரேசனுடன் வந்த நண்பர்கள் அனுசியாவை காருக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களைத் தடுக்க முயன்றவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அனுசியா காரில் ஏறி நொடிப்பொழுதில் தப்பிச்செல்வதை, தெருவில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில், இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தை விட்டுச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உடனடியாக, குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காரில் தப்பிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.