தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!
husband stabbing his wife to death while she was receiving treatment in the hospital
குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். ஆக்டிங் டிரைவராகப் பணிபுரியும் இவருக்கும், ஸ்ருதி (27) என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று (ஜூலை 19) கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் விஷ்ரூத், ஸ்ருதியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு ஸ்ருதி சிகிச்சைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை, மருத்துவமனையின் புதிய கட்டிடத்தின் முதல் தளத்தில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்த ஸ்ருதியை, விஷ்ரூத் கத்தியால் மூன்று இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய விஷ்ரூத்தை குளித்தலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த ஸ்ருதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மனைவியை கொலை செய்த விஷ்ரூத்தின் தந்தை ராமசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்புப் பூனைப் படையில் டிஎஸ்பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.