தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கடலூர் மற்றும் தஞ்சாவூரில் 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில், கடலூர், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, பண்ருட்டி, SRC குடிதாங்கி, கே.எம்.கோயில், அரியலூர் மாவட்டம் செந்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்புவனஜொம், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், RSCL-2 சூரப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் DSCL எறையூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கான வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 2 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 4 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், 5 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும். 6 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல் நாளை (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதிவரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.