தமிழ்நாடு

அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!

₹500 கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நண்பரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!
அயனாவரத்தில் அதிர்ச்சி: ரூ.500 தகராறில் நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை.. ஒருவர் கைது!
சென்னை அயனாவரத்தில், ₹500 பணப் பிரச்சனைக்காக நண்பரைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரனையில் கைது செய்யப்பட்டவர்மீது ஏற்கெனவே ஆறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை, செங்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் நாகூர் மீரான் என்பவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது தாயார் மற்றும் தம்பி பீர்முகமது ஆகியோர் பெரம்பூரில் வசித்து வருவதாகவும், அவருடைய தம்பி பீர் முகமது பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.

500 ரூபாய்-காக கொலை:

கடந்த 2024ம் ஆண்டு மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டுச் சிகிச்சை பெற்றுள்ளதால், நாகூர் மீரான், தனது தாயாருக்கும், தன்னுடைய தம்பி பீர் முகமதுவிற்கும் செலவுக்குப் பணம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுபோல, தம்பி பீர் முகமது பணம் கேட்டதால், நேற்று, அயனாவரம், கே.எச். ரோடு மற்றும் ஞானாம்பாள் கார்டன் சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு நாகூர் மீரான் தம்பி பீர்முகமது அவரது நண்பர் புவி (எ) கோபிநாத்துடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது பீர் முகமதுவிடம் பணம் ரூ.500 கொடுத்துவிட்டு, ஒரு சவாரியுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதற்கிடையே நாகூர் மீரான் பணம் கொடுப்பதை பார்த்த கோபிநாத் தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். பீர் முகமது மற்றும் கோபிநாத் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கோபிநாத்துக்கும், பீர்முகமதுவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கோபிநாத், கையில் வைத்திருந்த கட்டையால் பீர்முகமதுவைத் தாக்கியுள்ளார். இதில் பீர்முகமது மயங்கி விழுந்ததும், கோபிநாத் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

நாகூர் மீரான் உடனே சென்று மயங்கி விழுந்த பீர் முகமதுவை எழுப்பியபோது சுயநினைவு இல்லாதால், 108 ஆம்புலன்ஸ்-ஐ அழைத்தபோது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பொறுப்பாளர், பீர் முகமதுவை சோதனை செய்தபோது, பீர் முகமது ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தனது தம்பியைக் கொலை செய்த கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகூர் மீரான் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொலையாளி கைது:

புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், கோபிநாத்தைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கோபிநாத் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கோபிநாத் மீது ஏற்கெனவே இரண்டு கொலை முயற்சி உட்பட ஆறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

₹500 போன்ற சிறிய தொகைகளுக்காக ஒரு நண்பரே மற்றொரு நண்பரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட கோபிநாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.