தமிழ்நாடு

வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!

வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!
வத்தலக்குண்டு அருகே தென்னை நார் கழிவில் தீ விபத்து: 3 கி.மீ. சுற்றளவுக்குப் புகை மூட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே எம்.வாடிப்பட்டியில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பெரும் புகை மூட்டம் சூழ்ந்து, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

எம்.வாடிப்பட்டியில் உள்ள தரிசு நிலப் பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில், திடீரெனத் தீப் பிடித்துக் கொண்டது. இது, உடனடியாகக் குவியல் குவியலாகக் கிடந்த அனைத்து நார் கழிவுகளிலும் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத பகுதி என்பதால், சிறு சிறு தண்ணீர் வண்டிகள் மூலம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்கவும் அவர்கள் கடுமையாகப் போராடினர்.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தென்னை நார் கழிவுகளால் ஏற்பட்ட புகை, சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பரவியது. இதனால், அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும் அவதி அடைந்தனர். தீ முழுவதும் அணைந்த பின்னரே புகையின் தாக்கம் குறையும் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.