தமிழ்நாடு

தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!

தீ விபத்தால் வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிய தவெக பெண் நிர்வாகியை ஷூவால் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுபோல எதுவும் நடக்கவில்லை என போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!
தீ விபத்து சம்பவம்.. தவெகவினரை போலீசார் தாக்கவில்லை என விளக்கம்!

சென்னை வியாசர்பாடி முல்லை நகர் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து, 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தவெக நிர்வாகிகள் உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்தனர். அதற்காக

உணவு ஏற்பாடு செய்து தங்குமிட மையத்தில் இரவு உணவு வழங்கியதாகவும், உணவு வழங்கும் போது திடீரென காவலர்கள் உள்ளே நுழைந்து உணவு வழங்குவதைத் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தவெக நிர்வாகி கங்காவதி என்பவரை போலீசார் ஷூ காலால் எட்டி உதைத்ததாக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வயிற்றில் உதைத்ததில் வலிப்பு ஏற்பட்டு, தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து தவெக நிர்வாகியான தமிழ்ச்செல்வி என்பவர் புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துக்குமாரிடம் புகார் அளித்தார். ஷூவால் எட்டி உதைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு எம்கேபி நகர் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வைக்கப்பட்ட சிறிய இடம் என்பதால் 50 மேற்பட்ட தவெகவினர் கையில் கட்சி கொடியுடன் உணவு வழங்க வந்ததாகவும், அதனை பார்த்து மற்ற பொதுமக்களும் அங்கு குவிந்த நிலையில் அதிக அளவில் கூட்டம் சேர்ந்ததாகவும் அதனால் முறைப்படி உணவுகளை கொடுக்கக் கூறியதாகவும், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே அங்கு இருந்த நிலையில் தவெகவினர் 50 பேர் சூழ்ந்து கொண்ட வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை எனவும், தவெகவினர் அளித்த புகாரில் முறைப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி. செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை. மேலும், அவ்விசாரணையில் ஒருசிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாகத் தெரியவருகிறது.

இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.