தமிழ்நாடு

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு

அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு
திருவெறும்பூரில் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரனின் இல்ல திருமண விழா திருவெறும்பூர் பகுதியில் நடந்தது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அப்பா-மகன் உறவு முக்கியம்

பின்னர் அவர் பேசியதாவது, “திருச்சி நம் இயக்கத்திற்கு பெரும் முக்கிய பங்கு வைக்கிறது.திருச்சி மாநாடு என்றால் திருப்புமுனை தான். மணமகன் அப்பா-அம்மா சொல்வதைக் கேட்கவில்லை.

மனைவி சொல்லை மட்டும் கேட்காமல் தாய், தந்தை சொல்வதையும் கேளுங்கள். அரசியலில் அப்பா-மகன் உறவு முக்கியம். அப்பா சொல்வதை கேட்காதவன் என கூறி விடக்கூடாது. அந்த பிரச்சனை எனக்கும் இருக்கிறது. அதுபோல் தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

மகளிருக்கான அரசு

இந்த அரசு மகளிருக்கான அரசாக செயல்படுகிறது. முதல் கையெழுத்தாக விடியல் பயணத்திற்கு கையெழுத்திட்டது. புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு 22 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.அதில் விடுபட்ட தகுதியானவர்கள் நாளை நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இன்னும் 8 மாதம் தான் தேர்தலுக்கு உள்ளது. ஓரணியில் தமிழகம் என்ற முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் மு.க.ஸ்டாலினை அமர்த்த வேண்டும்.அதற்கு கட்சியினர் இந்த 8 மாதத்தில் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இன்று திருமண விழா காணும் சகோதரர் மணமக்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டு கொடுக்க வேண்டும். பிடிவாதம் பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதற்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.